பல்லாங்குழி ஆடையில பருவம் திறந்துவிடஈரப் பசை கண்டுஎன்னமோ ஏதோன்னுசாகத்தான் போறேன்னு சத்தமிட்டு நான் கத்த,விறுவிறுன்னு கொண்டாந்துவீடு சேர்த்த நெனவிருக்காஒண்ணா வளந்தோம்ஒருதட்டில் சோறுதின்னோம்பிரியாதிருக்க ஒருபெரியவழி யோசிச்சோம்ஒருபுருசன் கட்டிஒருவீட்டில் குடியிருந்துசக்களத்தியா வாழச்சம்மதித்தோம் நெனவிருக்கா?ஆடு கனவுகண்டாஅருவா அறியாதுபுழுவெல்லாம் கனவுகண்டாகொழுவுக்குப் புரியாதுஎப்படியோ பிரிவானோம்இடிவிழுந்த ஒடானோம்இருவது வயசோடஇருவேறு தெசையானோம்தண்ணியில்லாக் காட்டுக்குத்தாலி கட்டி நீ போகவறட்டூரு தாண்டிவாக்கப்பட்டு நான்போகஒம்புள்ள ஒம்புருசன்ஒம்பொழப்பு ஒன்னோடஎம்புள்ள எம்புருசன்எம்பொழப்பு என்னோடநாளும் கடந்திருச்சுநரைகூட விழுந்திருச்சுவயித்தில் வளந்தகொடிவயசுக்கு வந்திருச்சுஆத்தோரம் பூத்தமரம்ஆனைகட்டும் புங்கமரம்
போன வெருசத்துப்புயல்காத்தில் சாஞ்சிருச்சு...-வைரமுத்து
தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.
தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.
வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.
அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.
பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.
தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.
நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.
1. பண்டைத் தமிழ் நிலை2. காப்பியக்காலத் தமிழ் நிலை3. இடைக்காலத் தமிழ் நிலை4. தற்காலத் தமிழ் நிலை
என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,
பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.
இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.
தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.
ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.
என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.
ஃ – அக் என்னும் ஆயுத எழுத்து
அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்பஇக்கென மெய்யொலி இறுதியில் முடிக்கஅக்கென எழும்புமாயுத ஒலியைமும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்அவல நிலையைப் போக்கலாமெண்ணி
செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.
சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.
"ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்தோய் ( புறநானூறு.2)
என்ற பாவடிகள் சேரமன்னனான பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதனைப் பெருமைப் படுத்த முடிநாகராயர் என்ற புலவரால் பாடப்பட்டதாகும். இவ்வடிகளில் பாண்டவர்கள் ஐவர், கௌரவர்கள் நூற்றுவர் ஆகியோருக்குப் பாரதப்போரின்போது பெருஞ்சோற்றினை மேற்கண்ட அரசன் வழங்கினான் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்முலம் பாரதம் நிகழ்ந்த காலத்தோடு சங்க இலக்கிய காலம் ஒன்று படுவது தெரியவருகிறது.
இதுபோன்று பல இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை எடுத்தியம்பினாலும், சான்றுகளைத் தரும் இலக்கியங்களின் காலம் என்பது ஐயத்திற்கு இடமளிப்பதால் இவை தரும் சான்றுகளை துணைச் சான்றுகளாகவே வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் எழுத்துவடிவ இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் வரி வடிவம் என்பது பன்னெடுங்காலமாக பல்வகை மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ந்து வந்திருப்பதால் இவற்றினைக் கொண்டு பண்டைக்கால வரலாற்றினை உறுதி செய்ய முடிவதில்லை. அதனோடு பண்டைய வரி வடிவத்தையும் உணரமுடியாமல் போய்விடுகின்றது.
இக்குறை நீங்கி உண்மை உணர, உணர்த்தப்பட குகைக்கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழைய கால நாணயங்கள், கடல் அகழ்வாய்வுகள், அகழ்வாய்வுகள் போன்றன தரும் எழுத்துவடிவச் சான்றுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை ஆராய அறிஞர்கள் முயல்கின்றனர். இவற்றின் உண்மைத்தன்மை மாறாத நிலைப்புத் தன்மை கொண்டவை என்பதனால் இவை முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.
குகைக்கல்வெட்டுக்கள்
தமிழ்நாட்டில் உள்ள தொன்மைவாய்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்துக் கிடைக்கும் எழுத்துவடிவங்களை ஆராய்ந்து அவற்றின் வழியாக தமிழின் தொன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
ஐராவதம் மகாதேவன் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள பண்டைய கால குகைக்கல்வெட்டுக்கள் முன்றினை முன்வைக்கின்றார்.
"குகைக்கல்வெட்டுக்களில் மிகவும் முக்கியமானவை மூன்று. மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும்(கி. பி. முதல் நூற்றாண்டு), புகழுரில் சேரல் இரும்பொறையும் (கி. பி. இரண்டாம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுக்களாகும். இவை சங்ககாலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம் என்ற அவரின் கருத்து தமிழ்ச்சங்க காலத்தின் கால எல்லையை உறுதிப் படுத்தும் ஆவணமாகும்.
மயிலை சீனி. வேங்கடசாமி ஏறக்குறைய இருபத்தைந்து குகைக் கல்வெட்டுக்களை தமிழின் தொன்மைக்கு முன்வைக்கின்றார். மீனாட்சிபுரம் கல்வெட்டு, திருவாதவூர் கல்வெட்டு, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, சித்தன்னவாசல், கருங்காலக்குடி, மருகல்தலை, அழகர்மலை, வரிச்சியூர், திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டி, ஆனைமலை, புகழுர், திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, மாமண்டுர், அரசலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்றம், கழிஞ்சமலை, ஐயர்மலை, சங்கரமலை, மாலகொண்டாக் கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள், மற்றும் எழுத்துவடிவங்கள் போன்றனவற்றைக் கொண்டுத் தமிழின் தொன்மையை மயிலை சீனி . வேங்கடசாமி நிறுவுகின்றார். (மயிலை சீனி. வேங்கடசாமி, சங்ககாலத் தமிழக வரலாறு பக் 4565) இவற்றை அவர் அசோகப் பேரரசர் காலத்திற்கு முன்னது என்றும் உறுதி செய்கின்றார். மேலும் இக்கல்வெட்டுக்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள் கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக வடிக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இருந்து வேறுபட்டன என்பதையும் அவர் உறுதி செய்கின்றார். இதன் காரணமாக முத்த கல்வெட்டுக்களாக இவை உறுதி செய்யப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் வாயிலாக சங்க காலத்தைய ஊர்ப்பெயர்கள், வணிகக் குழுக்கள், அரசர்கள், மக்கள் பெயர்கள் போன்றன அறியப் பெறுகின்றன. இவற்றின் வாயிலாக சங்க இலக்கிய மரபுகளுடன் இவை ஒத்துப்போவதால் இவை சங்கத்தின் காலத்தை முடிவு செய்ய உதவியுள்ளன என்பது குறிக்கத்தக்கது.
நாணயங்கள்
தொன்மை காலத்து நாணயங்களில் காணப்படும், எழுத்து, உருவ அமைப்புகள் கொண்டும் தமிழின் இருப்பை, தொன்மைக்காலத்தது என்று உணர்த்தமுடிகின்றது. நடன. காசிநாதனின் `தமிழர் காசுஇயல்' என்ற நூல் சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்புவதாக உள்ளது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
"பூம்புகாரக் காசில் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன் குளக் காசுகளில் பெரியதாக உள்ள காசில் முன்பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும் பின்பக்கம் மீன் உருவம் போன்றும் உள்ளன.(நடன. காசிநாதன், தமிழர் காசுஇயல்.ப. 21) என்ற அவரின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.
இவை தவிர பல வெளிநாட்டுக் நாட்டுக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாணிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இவற்றின் கால அளவும் தமிழின் தொன்மையை அறிவிக்க உதவுகின்றன. `இய்யல் என்னும் ஊர் சேர நாட்டின் பண்டைத் துறைமுகங்களாகியத் தொண்டி மற்றும் முசிறி ஆகியவைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இய்யலில் கிடைத்துள்ள காசுகளில் நான்கு காசுகள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ரோமானிய நாட்டில் நிலவிய ` ரிபப்ளிகன்' காலத்தில் வெளியிடப்பட்டவை. அவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனாலும் கி. மு. 123 ல் இருந்து கி. மு. 86 ஐச் சார்ந்தது என்பது தெளிவாகும் என்று டாக்டர் பரமேஸ்வரி லால் குப்தா தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள், மேலது) இக்கருத்தின் முலம் தமிழர்களின் வாணிகப் பெருமை ரோமாபுரி வரை பரவியிருந்தமை தெரியவருகிறது. இவற்றின் முலமாகவும் தமிழின் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள முடிகின்றது.
ரோமானியத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிளைனி (கி.பி. 70), பெரிபுளுஸ் (கி.பி. 80), தாலமி (கி.பி. 120)ஆகியோர் தம் குறிப்புகளும் தமிழகத்தில் முவேந்தர் ஆட்சி நடைபெற்றதையும், வணிகம் சிறப்புற்றிருந்ததையும் குறிக்கின்றன. (விரிவிற்கு : மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம் , சென்னை)
இவ்வாறு நாணயங்கள் வழியாகவும் தமிழின் தொன்மையை நிறுவிக் கொள்ள முடிகின்றது.
மேற்காட்டியவற்றின் வழியாக சங்க காலம் என்பதன் முடிவுப் பகுதியை உறுதி செய்து கொள்ளமுடிகின்றது. அதாவது கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதான வாழ்வினைச் சங்கத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர் என்பதே அந்த முடிவாகும். அக்காலத்திலேயே நயத்தக்க நாகரீகம் மிக்க உயர்குடியாக தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அவர்களின் சங்க இலக்கியங்கள் சான்றுபயக்கின்றன.
இந்தக் காலத்திற்கும் முன்னதாக தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதாக தற்போதைய ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற பண்டைய நாகரீகக் களத்தில் வாழ்ந்த குடி தமிழ்க்குடி என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இப்பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்பதைப் பின்லாந்து அறிஞர் `பர்கோலா' நிறுவிவருகிறார். சிந்து சமவெளி நாகரீகம் எனப்படும் இந்த நாகரீகத்தின் முலமே திராவிடம் என்ற கருத்தினை உலக அளவில் உறுதி செய்யும் ஆய்வுகள் தற்போது எழத்தொடங்கிவிட்டன.
ஆரியர்கள், திராவிடர்கள் வடமொழி, தென்மொழி என்ற இருஎல்லைகளில் ஆரியர்களுக்கு முந்தையவர்களாகத் திராவிடர்கள் சிந்துசமவெளியில் வாழ்ந்தனர் என்ற கருத்தினுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக இவ்வாய்வுகள் தற்போது வலிமை பெற்று வருகின்றன. அங்குக் கிடைத்துள்ள ஆபரணங்கள், கருவிகள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் உள்ள எழுத்து வடிவங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க கிடைத்திருக்கும் சான்றுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறப்படும் வாழ்முறை, நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திராவிட இனத்தை முன்னைப் பழமைக்கும் முத்த பழமையாக காட்டி நிற்பதே இவ்வாய்வுகளின் நோக்கமாகும்.
இந்திய அரசின் செம்மொழி நிறுவனமும் தமிழின் தொன்மையை ஒத்துக் கொள்கிறது. அது எவ்வளவு காலம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. செம்மொழி நிறுவனம் தமிழின் தொன்மை என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறித்துத் தன்னிறைவை அடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கலாம் என்ற கருத்துரு ஏற்கப்பட்டிருப்பினும் தமிழின் தொன்மை அதனைத் தாண்டி மிகவும் முந்தையது என்பதை நிறுவ தமிழ்த் தொன்மை பற்றிய ஆய்வுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.
உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை
"பதியெழ அறியாப் பழங்குடியினர்" என இளங்கோவடிகள் கூறுகிறார்,
இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்
"படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்"
எனக் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்"
என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய
காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத்
தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும்.
இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.
தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை,
ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை.
எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும்
காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,
கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை
உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதல் மொழி" எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் "இலத்தின்", "கீரிக்" மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.
முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.
1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும்
அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானது
அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.
2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே
தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது
2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,
தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்
கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.
அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.
அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.
3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஓன்றே.
அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.
இவ்வுண்மையை "தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்
"அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு
முற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.
தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்
புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,
இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.
மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்
அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.
இதைக் கொண்டு ஆராய்வோம்..
தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??
அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?
ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.
மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே
No comments:
Post a Comment